அகத்தியர் இத்தலத்திற்கு வந்தபோது, விஷ்ணு வடிவமாக இருந்த மூலவரை தமது கையால் தடவி குறுகச் செய்து சிவலிங்கமாக மாற்றிய தலமாதலால் 'குற்றாலம்' என்ற பெயர் பெற்றது. குறுமுனி குறுக்கியதாலும், குரும்பலா தல விருட்சமாக இருந்ததாலும் இத்தலத்து மூலவருக்கு 'குரும்பலா ஈசர்' என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோயில் குற்றால அருவியின் சாரலில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலையின் உச்சியில் மூன்று சிகரங்கள் அமைந்துள்ளதால் 'திரிகூடமலை' என்னும் பெயரும் உண்டு.
மூலவர் 'குற்றாலநாதர்', 'குரும்பலாநாதர்' என்னும் திருநாமங்களுடன், மிகச் சிறிய பாணத்துடன், லிங்க வடிவில் தரிசனம் தருகின்றார். அம்பாள் 'குழல்வாய்மொழியம்மை' என்னும் திருநாமத்துடன் வணங்கப்படுகின்றாள்.
நடராஜருக்கு உரிய பஞ்ச சபைகளுள் இது சித்திரசபை. இக்கோயிலில் நடராஜர் சுவரில் சித்திர வடிவமாக உள்ளார். அருகில் கூத்தர் சபை உள்ளது.
இக்கோயிலில் உள்ள பராசக்தி சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் பராசக்தி பீடமாக விளங்குகிறது.
அகத்தியர், அர்ஜூனன், கபிலர், பட்டினத்தார் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருக்குற்றாலத் தலபுராணமும், குற்றால குறவஞ்சியும் இயற்றிய மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் இவ்வூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|